Friday, May 11, 2007

நெடுநாள் உறவு

எனக்கும் இவளுக்கும் நெடுநாள் உறவு.
இவளைத் தரிசிக்காமல் என் நாட்கள் விடிவதில்லை.
நான் தவழும் காலத்திலேயே இத்திண்ணை என் சொந்தம்.
இவள் முன்றலில் நின்ற பெருவிருட்சம் குண்டு தைத்த காயங்களால் குடைசரிந்த கதை என் சின்ன இதயத்தைச் சில்வண்டாய் குடைவதுண்டு.

காலநதி முட்டும் கரைகள்

இராட்சதப் புகைக்கூண்டும், மகாபாரதம் எனும் இராட்சத மின்படலமும் என் நினைவுத்துளிகளில் நீள்கதைகள் கூறக் காத்திருப்பவை. காலநதி முட்டும் கரைகளில் எல்லாம் பழங்கதைகளைப் பசுமையாக்கி இந்தப் பதிகை உங்களோடு பேசும்.

பூப்பூவாப் பறந்துபோகும் பட்டுப்பூச்சியக்கா.

அகரத்தில் ஆரம்பிப்பதுதானே முறை.
அழகான மணற்பரப்பில் "அ" எழுதி அன்னை தமிழை எனக்கு ஊட்டிய ஆரம்பக் கல்விக்கூடம் வல்வையின் "கணபதி பாலர் பாடசாலை"
"பூப்பூவாப் பறந்து போகும் பட்டுப்பூச்சியக்கா - நீ
பளபளன்னு போட்டிருப்பது யார் கொடுத்த சொக்கா."
அசை போடல் ஆடு மாடுகளுக்கு மட்டுந்தானா?
கூடப்படித்தவர்கள் பலர் விரிந்து பரந்த உலகில்,
சிலர் மலர்ப்படுக்கையிட்டு மாவீரர் இல்லங்களில்..... என் இதயம் கனப்பதும், கசிவதும் இவர்களிடத்தில் மட்டுமே.
அந்த அழகான நாட்கள் இன்னும் எனக்குள் எண்ணச்சிறகுகளை விரித்துப் பறக்கின்றன. திரும்பத் திரும்ப கடந்த காலங்களை மீட்டிப் பார்ப்பதில் தனிச்சுகம்.